முக்கியமான 10 கோவில்கள்
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் :
கள்ளழகர் கோயில்., 108 திவ்ய தேசக் கோயில்களில் ஒன்றான அழகர் கோயில் மதுரையிலுருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுதப்பட்ட சங்க இலக்கியமான பரிபாடல் , சிலப்பரிகாரம், இதிகாசமான ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் இந்த மலையை பற்றி அப்பொழுதே வர்ணிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அபரஞ்சி தங்கம் எனப்படும் அரிய வகை தங்கத்தால் ஆன சுவாமி திருமேனிகள் இரண்டு கோவில்களில் மட்டும் தான் உள்ளது.
1 , திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயில்
2 , நம் கள்ளழகர் ( இங்கு ) .
இந்த அழகர் மலை 18 கிலோமீட்டர் நீளமும் 1049 அடி உயரமும் கொண்டு கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.
நடை திறப்பு :
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை. மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை.நடை திறந்திருக்கும்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் :
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவலோகத்தின் அரசனான இந்திரனால் கட்டப்பட்டது.
எட்டுகோபுரங்கள் இருக்கின்றன. இதில் நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன.
1 , கிழக்குக் கோபுரம் - முதன்முதலில் பாண்டியர்களால் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டு பிற்காலத்தில் கட்டப்பட்ட இக்கோபுரம் 153 அடி உயரம் உடையது.
2 , மேற்குக் கோபுரம் - மாறவர்மன் குலசேகர பாண்டியனால் கி.பி. 1323 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோபுரம் 154.6 அடி உயரம் உடையது.
3 , தெற்குக் கோபுரம் - மன்னர் விசுவநாத நாயக்கரால் கி.பி. 1559 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோபுரம் 160 அடி உயரம் உடையது.
4 , வடக்குக் கோபுரம் - முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரால் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோபுரம் 152 அடி உயரம் உடையது.
நடை திறப்பு :
காலை 5 மணி முதல் 12.30 மணி வரை.
மாலை 4 மணி முதல் இரவு 10.00 மணி வரை.
பழமுதிர்சோலை முருகன் கோயில் :
முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடாகும். அழகர் கோவில் மலை மீதுள்ள பழமுதிர்சோலையில் அமைந்துள்ளது.ஆறு படைவீடுகளில் முருகப்பெருமான் தனது மனைவி வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கும் ஒரே கோயில் இதுவாகும்.
மேலும் முருகப்பெருமான் அவ்வையார் பாட்டிக்கு சுட்டப்பழம் வேண்டுமா, சுடாதபழம் வேண்டுமா என்று கேட்டு பழத்தில் எப்படி சுட்டபழம், சுடாத பழம் உண்டு என்பதை அனுபவ பூர்வமாக உணர்த்திக் காட்டிய உன்னதமான தலம் இதுவாகும்.
நாவல் மரங்கள் ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் காய்க்கும் என்பது தாவரவியலின் கோட்பாடு, ஆனால் இங்கு முருகப்பெருமானின் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் கோயிலில் உள்ள நாவல் மரங்கள் பழங்களைத் தரும்.
நடை திறப்பு :
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்..,முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாக திகழ்கின்றது.முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில், இக்கோயில் அளவில் பெரியதாகும். திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை, ஒரு குகைக் கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலின் கோபுரம் 150 அடி உயரமுடையது. கோவிலின் நுழைவுவாயிலில் ''முருகன் தெய்வானை திருமணக்கோலம்' உள்ளிட்ட 10 பெரிய கற்றூண்கள் அமைந்துள்ளது. முருகப்பெருமான் இங்கு அவதாரம் எடுத்து , சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காத்ததால் ,தேவர்களின் தலைவனான இந்திரன் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் தன் மகளாகிய தெய்வயானையை, திருமணம் செய்து கொடுக்க விரும்பினான்.இதன்படி முருகன்-தெய்வயானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
நடை திறப்பு :
காலை 5.30 மணி முதல் 1 மணி வரை , மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
வண்டியூர் மாரியம்மன் திருக்கோவில் :
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் காமராஜர் சாலையில் உள்ளது.இக்கோவில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இங்குள்ள அம்மன் காவல் தெய்வமாக உள்ளார். துர்க்கை அம்மனும், மாரியம்மன் சேர்ந்து ஒரே அம்மனாக இங்கு காட்சி தருகிறார்.
பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக அம்மன் இங்கு வலக்காலை இடக்காலின் மீது மடக்கி உட்கார்ந்த நிலையில் உள்ளார்.மதுரையில் உள்ள மற்ற கோயில்களில் விழா என்றால் முதன் முதலில் இந்த மாரியம்மனை பூஜை செய்த பின்னரே விழாவை தொடங்குவார்கள்.
நடை திறப்பு :
காலை 6மணிமுதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.
கூடலழகர் பெருமாள் திருக்கோவில் :
கூடலழகர் பெருமாள் கோயில் , 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம்அமைந்துள்ளது.மூன்று தளங்களும் 5 சிகரங்களும் கொண்ட அஷ்டாங்க விமானம். இதன் நிழல் தரையில் விழுவதில்லை.
கூடலழகர் அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் அமர்ந்த கோலத்திலும், சூரிய நாராயணர் இரண்டாவது தளத்தில் நின்ற கோலத்திலும், பாற்கடல் நாதர் மூன்றாவது தளத்தில் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகிறார்.
நடை திறப்பு :
காலை 6 மணி முதல் 12 மணி வரை,மாலை 4 மணி முதல் 9 மணி வரை
அபய வரத ஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் :
கோயில் 450 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.ஸ்ரீ வியாசரால் பிரதிஷ்டை செய்த 732 அஞ்சேநேயர் சிலைகளில் இந்த ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்று. இங்கு அரச மரமும் வேப்ப மரமும் இணைந்து காணப்படுகிறது.இங்கு காலை மாலை என இரு வேலைகளில் பூஜை செய்யப்படுகிறது.இங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நடை திறப்பு :
காலை 6 மணி முதல் 12.00 மணி வரை. மாலை 5மணி முதல் இரவு 9 மணி வரை.
பாண்டி முனீஸ்வரர் கோயில் :
மாட்டுத்தாவணி அருகில் அமைந்துள்ளது.பாண்டி சாமி காவல் தெய்வமாக இங்கு அமைந்துள்ளார். இக்கோயில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
கம்பீரமான மீசை மிரட்டக்கூடிய கண்கள் மிகப்பெரிய ஜடா முடி சங்கிலியால் கட்டப்பட்டுள்ளார் சுவாமி பாண்டி முனீஸ்வரர்.
நடை திறப்பு :
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.
முக்தீஸ்வரர் திருக்கோவில்
முக்தீஸ்வரர் திருக்கோவில் ,மன்னர் திருமலை நாயக்கரின் சகோதரரான முத்து வீரப்ப நாயக்கரால் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. கோவில் வளாகத்தில் கிலுவாய், நெல்லி, மாவிலங்கை மற்றும் சாதாரண வில்வம் நான்கு வகையான வில்வம் மரங்கள் உள்ளன
சூரியன் ஆண்டிற்கு இரண்டு முறை மார்ச் 10 முதல் 21 வரை, செப்டம்பர் 19 முதல் 30 வரையில் சில விநாடிகள் மட்டும் தனது ஒளிக்கிரணங்களால் சுவாமியை பூஜை செய்வார்.
நடை திறப்பு :
காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 4 மணி முதல் 8.30 மணி வரை
இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் :
கிழக்கு பார்த்த நிலையில் அமைந்த லிங்கத்திற்கு பின்புறத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றனர். இத்தலம் பூலோக கைலாயம் என அழைக்கப்படுகிறது.
மூலவருக்கு வருடத்தில் 12 அமாவாசை , 12 பௌர்ணமி மற்றும் மார்கழி மாதம் 30 நாட்களில் மொத்தம் 54 நாட்களில் மட்டும் நடைபெறுகிறது.
நடை திறப்பு :
காலை 6.15 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு மணி 9.30 வரை .
Back to previous page